கட்டாய மதமாற்ற புகார் - தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரி வழக்கை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்து இருந்த வழக்கில் குறிப்பாக கல்வி நிலையங்களில் மதமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும்,தடை விதிப்பதற்காக வழிக்காட்ட நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல,அதன் அடிப்படையில் மனுவை ஏற்க கூடாது என்று அரசு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பதை மனுதாரர் விளக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
மதமாற்றம் குறித்த ஒரிரு புகார்கள் மட்டுமே வந்திருப்பதாகவும்,அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மனுதாரரின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இன்று தள்ளி வைத்திருந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு எதன் அடிப்படையில் தொடரப்பட்டது.இது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக தஞ்சாவூர்,திருப்பூர்,கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மதமாற்றங்கள் தொடர்பாகவும்,மாணவி மரணம் தொடர்பாகவும் வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு உகந்தது என்றும்,இந்த வழக்கு குறித்து தமிழக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜுன் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.