கொடுங்கையூர் கவுன்சிலரால் திமுகவுக்கு வந்த புதிய தலைவலி - அதிரவைக்கும் வீடியோ
திமுக கவுன்சிலரால் அந்த கட்சியின் தலைமைக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் கொய்யாத்தோப்பு சோலையம்மன் பகுதியைச் சேர்ந்த தேவி என்பவர் குறிப்பிட்ட இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த பகுதியைச் சேர்ந்த 34 வதுவார்டு கவுன்சிலரான ஷர்மிளா காந்தியின் கணவர் கருணாநிதி மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினராக உள்ளார்.
இதனிடையே நேற்று காலை வீடு கட்டி வரும் தேவியிடம் கருணாநிதி சென்று, முறையான கட்டுமான அங்கீகாரம் உள்ளதா? என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஷர்மிளாவும் உடன் சென்ற நிலையில் கருணாநிதி தான் இந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.
உடனே தேவியும் முறையான அங்கீகாரம் உள்ளதாக கூற, அப்படியானால் பணிகளை உடனே நிறுத்தி டாக்குமென்ட்டை காட்டுங்கள். அதனைப் பார்த்துவிட்டு சரி என்று சொன்னபிறகுதான் வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லி கட்டுமானப்பணிகளையும் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதேசமயம் பணிகளை மீண்டும் தொடங்க லட்சக்கணக்கில் கருணாநிதி பணம் கேட்டதாகவும் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த தேவி மறுநாள் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்று கேள்வி எழுப்பியுள்ளார். அங்கே கருணாநிதியும், ஷர்மிளாவும், வேறு சிலரும் உட்கார்ந்திருந்தனர். அப்போது பணம் கேட்டு கவுன்சிலரின் கணவர் கருணாநிதி ஷர்மிளாவை மிரட்டியதாகவும், அவ்வளவு பணம் தன்னால் தர முடியாது என்று தேவி சொன்னதாகவும் கூற அது வாக்குவாதமாக மாறியது.
.ஒருகட்டத்தில் நான் நேத்து என்ன கேட்டேன்? உங்க இடம்தானே கட்டுங்க.. முழுசா கட்டிக்குங்க. நான் அவ்ளோ சொன்னேன் இல்லை? என்று கருணாநிதி எகிற, தேவியோ, எங்க இடம் நாங்க கட்டறோம்.. எங்கிருந்தோ வந்து கவுன்சிலர் ஆயிட்டு எங்களை மிரட்டறீங்க? நல்லது பண்றதுக்காகத்தானே வந்திருக்கீங்க? மேடம், நீங்கதானே கவுன்சிலர். உங்க வீட்டுக்காரர் ஏன் பேசறார்?. வீடியோ எடுக்கறேன்.. இப்போ பேசுங்க எல்லாரும் என்று கொந்தளிக்கிறார்.
அப்போது அங்கிருந்த சிலர் தேவியிடம் மோத அல்லக்கை எல்லாம் பேசக்கூடாது என பதிலுக்கு பதில் மல்லுக்கு நிற்கிறார் தேவி. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி திமுக தலைமையை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.