நடிகர் ரஜினி மீது போலீசில் புகார் - ரசிகர்களை கண்டிக்காமல் இருப்பதா? என கேள்வி

Rajinikanth Annaththa
By Petchi Avudaiappan Sep 13, 2021 05:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

ஆட்டை பலியிட்டு அபிஷேகம் செய்த ரசிகர்களை கண்டிக்காத நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.  

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

இதனிடையே ஏதோ ஒரு ஊரில் மோஷன் போஸ்டர் வெளியானதை கொண்டாடும் விதத்தில் ரஜினி கட் அவுட்டிற்கு ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தினால் அபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.

இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக வழக்கறிஞர் தமிழ் வேந்தன் மற்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் ரஜினி ரசிகர்களின் செயல் ஆயுத கலாச்சாரத்திற்கு வழி வகுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் இந்த செயலிற்கு நடிகர் ரஜினி தரப்பில் எந்த வித கண்டன அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் அபிஷேகம் செய்த நபர்கள் மீதும், ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்காத நடிகர் ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் அந்த புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.