வலிமை படத்தால் புதிய பிரச்சனை - இயக்குநர், தயாரிப்பாளர் மீது போலீசில் புகார்
நடிகர் அஜித்தின் வலிமை படத்துக்கு எதிரான சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குநர் எச்.வினோத், நடிகர் அஜித்,யுவன் சங்கர் ராஜா கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ள வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலில் சாதனைப் படைத்தது.
இதற்கிடையில் அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி என்பவர் அளித்த புகாரில் வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வலிமை படத்தின் தொடக்கக் காட்சியில் வழக்கறிஞர்களை குற்றவாளிகளைப் போல் சித்தரித்தும், குற்றச் செயல்புரியும் குண்டர்களாக வழக்கறிஞர்கள் செயல்படுவது போலவும் காட்சிப்படுத்தியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் சாந்தி கூறியுள்ளார்.
தொடர்ந்து சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு பணியை ஆற்றி வரும் வழக்கறிஞர்களை இழிவுப்படுத்தி காட்சியமைப்பதும், ஒரு சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட ஒட்டுமொத்த வழக்கறிஞர்களையும் தவறாக காட்டுவதும் கண்டனத்துக்கு உரியது என்றும் வழக்கறிஞர் சாந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.