என்னது ஹெச்.ராஜா மீது புகார் அளித்தால் பதவி நீக்கமா? அப்படி என்ன நடந்திருக்கும்?
ஹெச்.ராஜா மீது குற்றச்சாட்டுகளை வைத்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா போட்டியிட்டு தோல்வியடைந்தார். தனது தோல்விக்கு சில பாஜக நிர்வாகிகள்தான் காரணம் என எச்.ராஜா கொளுத்திப் போட காரைக்குடி பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதையடுத்து, காரைக்குடி பாஜக நிர்வாகிகள் சிலர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்ட பணத்தை எச்.ராஜா சரியாக செலவழிக்கவில்லை என்றும், பூத் கமிட்டிக்கு கூட அவர் சரியாக செலவிடவில்லை என்றும் அந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்ட பணத்தை ஹெச்.ராஜா சுருட்டிவிட்டதாகவும், சுப்பிரமணியபுரத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டி வருவதாகவும், எருமைப்பட்டி தோட்டத்தில் பண்ணை வீடு கட்டுமானப் பணிகள் நடப்பதாகவும் தெரிவித்தனர். எச்.ராஜா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஹெச்.ராஜா மீது குற்றச்சாட்டுகளை வைத்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி மண்டல் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல் தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டல் தலைவர் பிரபு ஆகியோர் கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்' என்று அவர் அறிவித்துள்ளார். இதனால் பாஜக வட்டாரங்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.