தொப்பையை வளர்த்தால் தான் திருமணம் - வித்தியாசமான பழக்க வழக்கம் கொண்ட நாடு
எத்தியோப்பியா நாட்டில் ஆண்கள் தொப்பை வளர்க்கும் பழக்கம் உள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உணவு முறைகள், வாழ்க்கை பழக்க வழக்கங்கள் காரணமாக உடலில் ஏற்படும் தொப்பையை குறைக்க நம்மில் பலரும் மணிக்கணக்கில் டயட், யோகா, உடற்பயிற்சி முறைகள் என அனைத்தையும் மேற்கொள்வோம். தற்போது வயது வித்தியாசமில்லாமல் வளரும் தொப்பையை எப்படியாவது திருமணத்திற்கு முன் குறைத்து விட வேண்டும் என மல்லுக்கட்டுபவர்களை பார்த்திருப்போம்.

ஆனால் தொப்பை இருந்தால்தான் திருமணத்திற்கு பெண் கிடைப்பார்கள் என கஷ்டப்பட்டு தொப்பை வளர்க்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த போடி என்ற பழங்குடியினர்களின் மத்தியில் தான் இத்தகைய வித்தியாசமான பழக்கம் உள்ளது. அங்குள்ள ஓமோ பள்ளத்தாக்கில் உள்ள காடுகளில் வாழும் இவர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி தொப்பை வளர்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.
காரணம் அங்கு தொப்பை வளர்த்து கொழுக் மொழுக் என இருக்கும் ஆண்களைத் தான் திருமணம் செய்து கொள்ள பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் என கூறப்படுகிறது. நன்கு பெரிய தொப்பையைக் கொண்டிருப்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தும், மதிப்பும் மரியாதையும் அதிகம் கிடைக்கும் என்பதாலேயே தொப்பையை வளர்க்க ஆண்கள் பல சிறப்பு உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
குறிப்பாக தினமும் இரண்டு லிட்டர் பசும்பாலில் மாட்டின் ரத்தம் கலந்து குடிக்கிறார்கள். இதற்காக பசுக்களை கொல்லாமல் அதன் உடலில் ஏதாவது காயம் ஏற்படுத்தி ரத்த ருசி பார்க்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு திருமணமாகாத ஆண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொப்பை போட்டி என்று பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிக்காக ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே தயாராக ஆரம்பித்து விடுகின்றனர்.
இதில் வெற்றி பெறுபவர்களை திருமணம் செய்ய பெண்கள் போட்டி போடுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.