சிங்கிளாக இருந்தால் பணிநீக்கம் - ஊழியர்களுக்கு கெடு விதித்த நிறுவனம்
திருமணம் செய்யாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
சீன மக்கள் தொகை
சீனாவில், இளம்வயதினர் திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருப்பதால் சீன மக்கள் தொகை வெகுவாக சரிந்து வருகிறது.
இதனால் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அந்த நாட்டு அரசு மற்றும் நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
திருமண விதி
கிழக்கு சீனாவின் ஷண்டோங் மாநிலத்தில் அமைந்துள்ள ஷுண்டியன்(The Shuntian Chemical Group) என்ற கெமிக்கல் நிறுவனம், 2001 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 1200 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு திருமணம் தொடர்பான விதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த விதிப்படி 28 முதல் 58 வயது வரை ஊழியர்கள், விவாகரத்து பெற்றிருந்தாலோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தாலோ இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் கெடு
திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர்கள், மார்ச் மாத இறுதிக்குள் சுயவிமர்சனக் கடிதம் ஒன்றை எழுத வேண்டும். ஜூன் மாத இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நிறுவனம் அவர்களைப் பற்றிய மதிப்பீட்டை நடத்தும். செப்டம்பர் மாத இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் இந்த விதி, திருமண சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், தொழிலாளர் சட்டத்தை மீறுவதாகவும் அமைந்துள்ளது என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த விதியை திரும்ப பெறுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.