2 நிமிடத்திற்கு மேல் கழிவறை பயன்படுத்தினால் அபராதம் - கேமரா வைத்து கண்காணிக்கும் நிறுவனம்
நிறுவனம் ஒன்று 2 நிமிடத்துக்கு மேல் கழிப்பறை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் விதியை உருவாக்கியுள்ளது.
கழிப்பறை பயன்பாட்டு விதி
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஃபோஷானில் அமைந்துள்ள த்ரீ பிரதர்ஸ் என்ற இயந்திர உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி, ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தவும் ஒழுங்கை பராமரிக்கவும் கழிப்பறை பயன்பாட்டு மேலாண்மை விதியை அறிமுகப்படுத்தியது.
2 நிமிட அனுமதி
இந்த விதியின் படி நிறுவன ஊழியர்கள், காலை 8 மணிக்கு முன்பும், காலை 10.30 மணி முதல் 10.40 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் 3.40 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், இரவு 9 மணிக்கு பின்னர் மட்டுமே கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
மற்ற நேரங்களில் கழிப்பறை பயன்படுத்த வேண்டுமானால், 2 நிமிடம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருத்துவ பிரச்சினை உள்ளவர்கள் HR யிடம் முன் அனுமதி பெற வேண்டும். நிறுவனத்தில் ஆங்காங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஊழியர்களைக் கண்காணிப்பதாகவும், விதியை மீறுபவர்களுக்கு 100 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.1,100) அபராதம் விதிப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விதி பிப்ரவரி இறுதி வரை சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.