தாய் இறந்ததால் உணவு இல்லாமல் பரிதவித்த 18 மாத குழந்தை
மகாராஷ்டிராவில் தாய் இறந்ததால் 18 மாத குழந்தை ஒன்று 2 நாட்களாக உணவு இல்லாமல் பரிதவித்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 18 மாத குழந்தையுடன் பெண் ஒருவர் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். அந்தப் பெண்ணிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் வேறு யாரும் இல்லாததால் குழந்தை உணவு மற்றும் பால் இல்லாமல் இரண்டு நாட்களாக பரிதவித்துள்ளது.
இரண்டு நாட்களாக வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் வீட்டின் உரிமையாளர் சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் உயிரிழந்தது தெரிய வந்தது. உடனே, இது குறித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொரோனா அச்சத்தால் அக்கம் பக்கத்தினர் யாரும் குழந்தைக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இதனையடுத்து, அந்தக் குழந்தைக்கு காவலர் சுசிலா பொறுப்பேற்று உணவு கொடுத்தார். அந்தக் குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சுசிலா கொண்டு சென்றார்.
அங்கு குழந்தைக்கு கொரோனா தொற்று பரிசோதனையும் செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை. இதனையடுத்து, அந்த குழந்தை காப்பாகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது கணவர் உத்தர பிரதேசத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பதாகவும், அவர் வருகைக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஜாவீத் தெரிவித்தார்.