செருப்பைக் கடித்ததால் ரத்தம் சொட்ட சொட்ட நாய்க்கு நடந்த கொடூரம் - வீடியோ வைரல்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கான்ஸ்டன்ட் சேவியர். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய புது செருப்பை வீட்டு வாசலில் விட்டுள்ளார். ஆனால், அந்த செருப்பை நாய் கடித்து விட்டது. வெளியே வந்து பார்த்த சேவியர் ஆத்திரம் அடைந்தான். உடனே அந்த நாயை பைக்கின் பின்னால் கயிற்றில் கட்டி வைத்து, தன்னுடைய மகனை பின்னால் அமர வைத்து, வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றிருக்கிறான்.
பைக்கின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நாயும் ஓடி உள்ளது. ஆனால், ஒரு கட்டத்தில் அந்த நாயால் ஓட முடியாமல் சாலையில் குப்புற விழுந்தது. அதைப் பார்த்தும் சேவியர் பைக்கினை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே சென்றுள்ளான்.
வலி தாங்க முடியாமல் நாய் கத்தியது. ஆனாலும், ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டது. இதை கண்ட சிலர் பைக்கை வழிமறித்தனர். சேவியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அந்த நாயை அவிழ்த்து விட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் பறந்து விட்டான் அந்த கொடூரக்காரன் செவியர்.
இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்த சிலர் சமூவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. விலங்குகள் நல வாரியத்தின் கவனத்திற்கு சென்றதால் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கை பதிவு செய்த போலீசார் நேற்று சேவியரை கைது செய்தனர். ஆனால் சேவியர் உடனே ஜாமீனில் வெளியே வந்துவிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
படுகாயமடைந்த அப்பாவி நாய்க்கு கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.