முதலாளித்துவத்தை மிரட்டிய கம்யூனிசம் காணாமல் போனதா - அரசியல் வீழ்ச்சி!
இந்தியப் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சி. து. ராஜா 21 ஜூலை 2019 அன்று இந்திய பொதுவுடமைக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரா. முத்தரசன் என்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கிறார்.
கம்யூனிசம்
1962-இல் நடைபெற்ற இந்தியச் சீனப் போரின் காரணமாக கட்சித் தலைவர்களுக்கிடையே சீனாவை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற முரண்பாடுகள் ஏற்பட்டது. எஸ். ஏ. டாங்கே தலைமையிலான தலைவர்கள் சோவியத் ஒன்றியம் மற்றும் இந்தியாவை ஆதரித்தனர். சில தலைவர்கள் சீனாவை ஆதரித்தனர். இதன் காரணமாக 1964-இல் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட தலைவர்கள் புதிய மார்க்சிஸ்டு கட்சியை நிறுவினர்.
ரஷ்யப் புரட்சி அக்டோபர் 1917ல் வெற்றி பெற்ற பிறகு மேற்கத்திய நாடுகளிலும் கீழ்த் திசை நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கத் தொடங்கினார்கள். அதே போன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த எம். என். ராய் போன்றவர்களின் சில குழுக்கள் மார்க்சியத்தின் பொதுவான கோட்பாடுகளை இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப, பழைய சோவியத் ஒன்றியத்தில் இருந்த தாஷ்கண்ட் நகரத்தில், இந்தியப் பொதுவுடமைக் கட்சியைத் தெடங்கினார்கள்.
இந்தியாவில் புரட்சி
1925ஆம் ஆண்டு கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த சிங்கார வேலர் இந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். கம்யூனிசக் கொள்கைகளைக்கொண்டு செயல்பட்ட பகத் சிங், தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக `நான் மார்க்சிய லெனினியத்தை அடிப்படையாகக்கொண்டவன்’ என்று அறிவித்தார். பகத் சிங் தூக்கிலிடப்பட்ட நிகழ்வு உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து பிரிட்டிஷாரை எதிர்ப்பதிலும், இந்தியச் சுரண்டலை அகற்றுவதிலும் கம்யூனிஸ்ட்களே சிறந்தவர்கள் என்ற எண்ணம் உருவானது. தொடர்ந்து, இந்திய இளைஞர்கள் பலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையத் தொடங்கினர். இந்தியா முழுவதும் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது இந்திய கம்யூனிஸ்ட்! சுதந்திரத்துக்குப் பிறகு 1952-ம் ஆண்டு, முதன்முறையாகத் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
கட்சிப் பிளவு
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மெட்ராஸ் மாகாணத்தில் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில், 131 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் 62 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. 1957 தேர்தலில், 68 இடங்களில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் வெற்றி கண்டது. 1967 தேர்தலுக்கு முன்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சிலர் விலகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று தனியாக ஒரு கட்சியைத் தொடங்கினர்.
`காங்கிரஸ் கட்சியை, இந்திய கம்யூனிஸ்ட் தீவிரமாக எதிர்க்கவில்லை' என்பதே கட்சியின் பிளவுக்குக் காரணமாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், சர்வதேச அளவில் ஏற்பட்ட சில மாற்றங்கள்தான் பிளவுக்கு உண்மையான காரணம் என்கிறார்கள் தோழர்கள் சிலர். ரஷ்யாவும் சீனாவும் கம்யூனிசத்தை அடைய வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தன. சீன ஆதரவு நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் (சி.பி.எம்), ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட்டும் (சி.பி.ஐ) எடுத்தன. இதுதான் பிளவுக்கு உண்மையான காரணம் என்கிறார்கள்.
கூட்டணி
1967-லிருந்து இரண்டு கட்சிகளும் தனித் தனியே தேர்தலைச் சந்தித்தன. சி.பி.ஐ., சி.பி.எம் ஆகிய இரண்டு கட்சிகளும் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைத்து தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்திருக்கின்றன.2016-ம் ஆண்டு, தே.மு.தி.க தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில் இரண்டு கம்யூனிசக் கட்சிகளும் இணைந்தன. சி.பி.ஐ., சி.பி.எம் ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 25 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
சித்தாந்தம்
நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு எதிராக செயல்பட்டதைப் போல, முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் சக்திகளால் தாக்குபிடிக்க முடியவில்லை. முதலாளித்துவத்தை முறியடிக்க வேண்டும் என்பதுதான் சித்தாந்த ரீதியில் கம்யூனிஸம் என பெரும்பாலும் பேசப்பட்டாலும், முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராகப் போராடும் வசதிகள் கம்யூனிஸ்ட்களிடம் இல்லை. அதனால் தான் மிகவும் பின்தங்கிய பகுதிகளில், அடக்குமுறைக்கு எதிராக பெருமளவில் மக்களை அவர்களால் திரட்ட முடிகிறது.
ஆனால் அரசின் தலையீடு காரணமாகவோ அல்லது சமூக முன்னேற்றம் காரணமாகவோ அங்கு நிலைமை முன்னேறினால், அதுபோன்ற பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தேவை குறைந்து வருகிறது. இதன் காரணமாக இன்னும் விரிவான, அடிப்படை திட்டங்களுக்கான தேவை இருக்கிறது. உலக அளவில் முதலாளித்துவம் தன்னுடைய வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளது, ஆனால் கம்யூனிஸம் மாறாமலே இருக்கிறது.
பி.ராமமூர்த்தி
சென்னையில் கம்யுனிஸ்ட் கட்சியை உருவாக்கிய பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பல கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் தங்களுக்கு எதிரான பிறப்பிக்கப்பட்ட கைது ஆணையை தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது. ராமமூர்த்தி கைது செய்யப்பட்ட நேரம் தேர்தல் நேரமாக இருந்தது. கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை ராமமூர்த்தியை மதுரை வடக்கு தொகுதியில் களமிறக்க முடிவு செய்தது. அவரது சிறை வாழ்க்கையின் போது, மக்களை சந்திக்க பல்வேறு வழிகளை அவர் கையாண்டார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக, உடல்நலம் இல்லாதவர் போல் நடித்தார். அப்படி போகும் வழியில், பொதுமக்கள் கவனத்தை ஈர்க்க உரக்க சத்தத்துடன் கோஷங்கள் போடுவாராம். தேர்தல் ஆணையம், முடிவுகளை அறிவித்த போது, சிறையில் இருந்த ராமமூர்த்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சிதம்பர பாரதியை 3332 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.
தா. பாண்டியன்
தா. பாண்டியன் இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளரும் ஆவார். இவர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1989, 1991 தேர்தல்களில் வடசென்னைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு - இந்திய ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.
இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்வதற்கு முன்பாக, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப. ஜீவானந்தம் தொடங்கிய தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். இந்திய பொதுவுடைமை கட்சியில் இருந்து விலகி மொகித்சென் தொடங்கிய ஐக்கிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சி சார்பாக இருமுறை வடசென்னை மக்களவைத் தொகுதியில் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு மீள இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் மீளப் பொதுச் செயலாளரானார்.
இந்திய இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். சோவியத் நாடு நேரு விருதைப் பெற்றுள்ளார். பிப்ரவரி 26, 2021 அன்று தன் 88ம் வயதில் காலமானார்.
இரா. நல்லகண்ணு
இரா. நல்லகண்ணு சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். தப்போது மத்திய கமிட்டி உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவராக இருக்கிறார்.தமிழக அரசின் அம்பேத்கர் விருதைப் பெற்றுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து தனியாகப் பிரித்தறிய முடியாதபடி நல்லகண்ணுவின் வாழ்க்கை அமைந்திருந்தது.
எளிமை, இல்லாமையால் வந்த எளிமை அல்ல. லட்சியம் தந்த எளிமை. எளிமை சார்ந்த சித்தாந்தம் இல்லாமல் சமூக மாற்றங்கள் நிகழாது என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் அவர். இதனால்தான் இன்றைய கார்ப்பரேட் உலகில் ஓர் அதிசய மனிதராக நிற்கிறார்.
ப. ஜீவானந்தம்
ப. ஜீவானந்தம் ஏறத்தாழ 40 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள இவர் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர்.
பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.1957, 1962 சட்டமன்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியவில்லை.
எனக்கு உங்களுடைய அன்பு தேவையில்லை. காரணம், அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கத்தாருடைய துன்பங்களையும் துயரங்களையும் நிலை நிறுத்த அல்ல, ஆனால் ஆளும் வர்க்கத்தாருடைய மீத மிச்சங்கூட இல்லாத ஒரு புதிய சமுதாய அமைப்பைப் படைக்கவே நான் விரும்புகிறேன் என உரக்க ஒலித்தவர்.
முத்தரசன்
முத்தரசன், 1970இல் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக் குழுச் செயலாளராக இருந்தார். 1984இல் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1997இல் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகத் தேர்வானார். தொடர்ந்து 17 ஆண்டு காலம் அந்தப் பொறுப்பில் அவர் நீடித்தார். 2015இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தலில் ஒரேயொரு முறை மட்டும் போட்டியிட்டுள்ளார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தார்.
மீளுமா?
சமூகத்தில் நடைபெறும் தீவிர மாற்றங்களுக்கு ஏற்ப இந்தக் கட்சிகள் மாற்றத்தை ஏற்படுத்தி, தங்களின் தேவையை உணரச் செய்ய முடியுமா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. அரசாங்க அமைப்பை காணாமல் போகச் செய்வது என்ற பிரகடனத்தைச் செய்த கம்யூனிஸம், தாங்களே காணாமல் போவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமா என்பதே தற்போதைய எண்ணமாக நீடிக்கிறது.