"தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் போட்டி அரசு நடத்துகிறாரா? - முத்தரசன் கண்டனம்

R. N. Ravi Governor of Tamil Nadu
By Irumporai Apr 24, 2022 05:08 AM GMT
Report

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி , தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதாக  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

முந்தைய ஆளுநர் மாற்றலாகி, புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி அறிவிக்கப்பட்ட நேரத்தில், அவர் சாகசக் காரராக பரபரப்பான செய்திகள் வெளியாகியது. நீட் தேர்வு முறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை நீண்டகாலம் கிடப்பில் போட்டு, திருப்பி அனுப்பினார்.

இதன் தொடர்ச்சியாக சட்டப் பேரவையில் அந்த சட்ட மசோதாவை மீண்டும் ஒரு முறை தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும் எந்த முடிவும் எடுக்காமல் தாமதித்து வருகிறார்.

இந்த நிலையில் சட்ட மரபின் படியும், பதவி வழி முறையிலும் பல்கலைக் கழகங்களின் “வேந்தராக” செயல்படும் ஆளுநர் வரும் 25.04.2022 மற்றும் 26.04.2022 தேதிகளில், ஆளுநர் மாளிகையில் (ராஜ்பவன்) “வளர்ந்து வரும் உலகில் இந்தியாவின் பாத்திரம்” மற்றும் “2047 ஆம் ஆண்டில் உலகின் தலைவராகும் இந்தியா” என்ற பொருளில் பல்கலைக் கழகங்களின் சிறப்பு மாநாடு கூட்டியுள்ளார்.

இதில் ஒன்றிய, மாநில அரசுகளின் பல்கலைக் கழகங்கள், தனியார் பல்கலைக் .கழகங்களின் துணை வேந்தர்களும் பேராசிரியர்கள், பேராசிரியர்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் “பல்கலைக் கழகங்களின் “இணை வேந்தர்” பொறுப்பை பதவி வகித்து வருகிறார். ஆளுநர் மாளிகை அறிவிப்பில் அமைச்சர் பங்கேற்பு குறித்து எந்தத் தகவலும் இடம் பெறவில்லை.

"தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் போட்டி அரசு நடத்துகிறாரா? - முத்தரசன் கண்டனம் | Communist Party Of India Governor Rn Ravi

ஆனால் பன்னாட்டு தொழில்நுட்ப தனியார் நிறுவனமான சூ ஹோ கழகத்தின் நிறுவனரும், முதன்மை நிர்வாக அலுவலருமான திரு ஸ்ரீதர் வேம்பு“ முக்கிய உரையாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு அதிகாரத்தை பெற்றுள்ள ஆளுநர் மாநில சட்ட மன்றம் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டிய கடமைப் பொறுப்பில் உள்ளவர்.

மக்களாட்சியின் அடிப்படை கோட்பாடுகளை நிராகரித்தும், தமிழ்நாட்டு மக்கள் ஒட்டு மொத்த உணர்வுக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர் திரு.ஆர்.என். ரவியின் நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்ட அத்துமீறல் என்பதுடன் மக்கள் பிரதிநிதி ஆட்சி முறைக்கு எதிரான தலையிட்டு, போட்டி அரசை நடத்தும் அதிகபட்ச அத்துமீறலாகும்.

தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்க வேண்டும் என்ற வன்மத்துடன் செயப்படும் ஆளுநர் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் மாநில அரசுக்கும், மக்களாட்சிக்கும் வழங்கியுள்ள சட்ட உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் கூட்டியுள்ள பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

சட்டமிறலில் ஈடுபடும் ஆளுநரின் மாநாட்டை துணை வேந்தர்களும், பேராசிரியர்களும் புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.