உரிமைக்கு கொடி பிடித்த கட்சி.. கோட்டையினை பிடிக்குமா? மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஒரு பார்வை
கம்யூனிசத்தைப் பற்றிய தோற்றம் இந்தியாவில் பெரிய அளவில் இல்லாதிருக்கலாம். ஐரோப்பா அல்லது எந்தவொரு கண்டத்திலும் பெரிதாக இல்லாதிருக்கலாம். ஆனால் இந்தியாவில் கம்யூனிசத்துக்கு 100 ஆண்டு கால வரலாறு இருக்கிறது.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1920 அக்டோபர் 17-ல் தாஷ்கன்ட்டில் (அன்றைய சோவியத் யூனியனில், இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ளது) தொடங்கப்பட்டது. சோவியத் யூனியனில் போல்ஷெவிக் புரட்சியின் வெற்றியின் பின்னணியில், கட்சி சர்வதேச அளவில் பரவும் நிலையில் இது தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்டதில் மனவேந்திரநாத் ராய் முக்கிய பங்காற்றினார் .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்படுவதாக எம்.என். ராய் மற்றும் அவருடைய பங்காளர்கள் எவெலின் டிரென்ட் ராய், அபானி முகர்ஜி, ரோசா பிட்டிங்கோஃப், முகமது அலி, முகமது ஷபீக், எம்.பி.பி.டி. ஆச்சார்யா ஆகியோர் தாஷ்கன்ட்டில் அறிவித்தனர். இவர்களில் எம்.என். ராய் அமெரிக்க கம்யூனிஸ்ட்வாதியாகவும், அபானி முகர்ஜியின் கூட்டாளியான ரோசா பிட்டிங்கோஃப் ரஷிய கம்யூனிஸ்ட்வாதியாகவும் இருந்தனர்.
காந்தி ஆதரித்தார்
துருக்கியில் காலிப் ஆட்சியை மீண்டும் உருவாக்குவதற்கு, இந்தியாவில் ஆதரவு திரட்டும் நோக்கில் முகமது அலி, முகமது ஷபீக் ஆகியோர் ரஷியாவில் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மகாத்மா காந்தியும் காலிபட் இயக்கத்தை ஆதரித்தார். அந்த காலக்கட்டத்தில் தான் இந்தியாவில் இருந்து நிறைய கிலாபத் இயக்கவாதிகள், துருக்கியில் பிரிட்டனின் காலனி ஆட்சியை எதிர்ப்பதற்கு சில்க் ரூட் வழியாக துருக்கிக்கு சென்றனர்.
சிலர் நடந்தே அங்கு சென்றார்கள். அந்த காலக்கட்டத்தில் தான் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச அளவில் பரவிக் கொண்டிருந்தது. பிரிட்டனின் கம்யூனிஸ்ட் கட்சி, தங்களுடைய அரசுக்கு எதிராகவே போராடியது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்த எம்.என். ராய் தான் 1917-ல் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியை (சமூக உழைப்பாளர்கள் கட்சி) உருவாக்கினார் என்பதில் இருந்தே, அந்த காலக்கட்டத்தில் சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட் கட்சி பரவியது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
1971-ம் ஆண்டில் மேற்குவங்க ஜனநாயக முன்னணி அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால் கவிழ்க்கப்பட்டு ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. 1972-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து 1977 வரை ஆண்டது.
அதன்பின் 1977-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அது 32 ஆண்டுகள் ஆட்சி நடத்தியது. ஜோதிபாசு 23 ஆண்டுகள் முதல்வராகவும், புத்ததேவ் பட்டாச்சார்யா 10 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்தார்.
கேரளாவிலும், திரிபுராவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாகக் காலூன்றியது. கேரள மாநிலத்தில் இ.எம்.எஸ்.நம்பூதிரி பாட், இ.கே.நாயனார், வி.எஸ் அச்சுதானந்தன், வாசுதேவன் நாயர் வரை முதல்வர்கள் இருந்தனர். தற்போது பினராயி விஜயன் முதல்வராக இருக்கிறார்.
ஆட்சியை பிடிக்க முடியவில்லை
அதே சமயம் தமிழகம், ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தாலும், தேர்தலில் குறிப்பிட்ட சில இடங்களில் வெல்ல முடிந்ததே தவிர ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர முடியவில்லை. கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா அளவுக்கு தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேர்பிடித்து வளரவில்லை.
சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட்ட 1967-ம் ஆண்டு தேர்தலில் 11 இடங்களை வென்றது. 1971-ம் ஆண்டு போட்டியிட்ட 37 இடங்களிலும் தோல்வியைத் தழுவியது.
அதன்பின் 1977-ல் 12 இடங்களிலும், 1980-ம் ஆண்டில் 11 இடங்களிலும், 1984-ல் 4 இடங்களிலும் மார்க்சிஸ்ட் வென்றது.
அதன்பின் நடந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் மாறி, மாறி இடம் பெற்றுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் இருந்து வருகிறது. திராவிடர் கழகம், பின்னர் திமுக, கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குப் போட்டியாக காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்தது முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கே. பாலகிருஷ்ணன்
தற்போது தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) தமிழ்நாடு மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கே.பாலகிருஷ்ணன் (வயது 70) அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1970-ம் ஆண்டில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்.
1973-ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட செயலாற்றியவர் 1975-ம் ஆண்டு அவசர நிலை காலத்தின் போது தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு கட்சி பணிகளை நிறைவேற்றினார். 1989-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தின் கட்சியின் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
1982-ம் ஆண்டு முதல் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்ட கே.பாலகிருஷ்ணன் 1998-ம் ஆண்டு மாநில செயற்குழு உறுப்பினராகவும், 2012-ம் ஆண்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், 2018-ல் மாநிலச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினராக 2011-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு தொகுதியிலும், சட்டப்பேரவையிலும் சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.