வங்கதேசத்தில் வெடித்த மதக் கலவரம் - 4 பேர் பலியான சோகம்

வங்கதேசத்தில் 22 மாவட்டங்களில் கலவரம் பரவியதால் பிரதமர் ஷேக் ஹசீனா,  எல்லை பாதுகாப்பு படையினரை கலவர பகுதிகளில் ரோந்து செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

வங்கதேசத்தில் துர்கா பூஜையையொட்டி அம்மன் சிலைகளை கரைப்பதற்காக பக்தர்கள் தயாராகிவந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் பெருமளவில் திரண்டு, வழிபாடு நடத்திக் கொண்டிருந்தவர்களை தாக்கியதுடன், சாமி சிலைகளை சேதப்படுத்தி, கோவில்களை தாக்கியதால் கலவரம் வெடித்தது.

மேலும் இந்த கலவரம் வங்கதேசத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, இதுவரை 4 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராகவும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பெளத்தம் உள்ளிட்ட பிற மதத்தவர் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். வங்கதேசத்தில் 10% அளவுக்கு இந்துக்கள் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் அங்கு நவராத்திரி கொண்டாட்டத்தில் இந்து மதத்தினர் ஈடுபட்டனர். கடந்த புதன்கிழமை அன்று குமிலா எனும் ஊரில் உள்ள கோவில் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை குறிவைத்து இஸ்லாமியர்கள் பெருமளவில் திரண்டு அடித்து உதைத்து கோவிலையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த கலவரம் மெல்ல மெல்ல பிற மாவட்டங்களுக்கு பரவியிருக்கிறது. பல இடங்களிலும் தற்காலிக பந்தல்களில் துர்கை வழிபாடு நடந்து வந்தது. சாமி சிலைகளை ஆறுகளில் கரைப்பதற்காக திட்டமிட்டிருந்ததாகவும் அப்போது அங்கு வந்த பெரும் திரளானவர்கள் சாமி சிலைகளை சேதப்படுத்தி, அங்கிருந்தவர்களையும் அடித்துள்ளனர்.

இதே போல இஸ்கான் கோவில் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டு அக்கோவிலின் நிர்வாகி ஒருவர் கலவரத்தில் கொல்லப்பட்டிருக்கிறார். இதுவரை கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மேலும் 22 மாவட்டங்களில் கலவரம் பரவியதால் பிரதமர் ஷேக் ஹசீனா, உள்துறை அமைச்சகத்தை அறிவுறுத்தி எல்லை பாதுகாப்பு படையினரை கலவர பகுதிகளில் ரோந்து செல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறார். குமிலா எனும் ஊரில் நடைபெற்ற வழிபாட்டில் சாமி சிலையின் அருகே குரான் வைக்கப்பட்டிருந்ததாகவும், இது குறித்தான வீடியோ வெளியானதன் பேரிலேயே கலவரம் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்