ஆயுள் கைதிகளை முன்விடுதலை செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய குழு - முதல்வர் அறிவிப்பு

tngovernment prisonersreleasecommittee
By Petchi Avudaiappan Dec 24, 2021 12:02 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

ஆயுள் தண்டனைக் கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, சிறையில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவரும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்வது குறித்த முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, உரிய விரிவான வழிமுறைகள் வகுத்து அரசால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. ​

இதனைத் தொடர்ந்து, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடித்தும், இதன்கீழ் பயன்பெற முடியாத ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மற்றும் வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணைநோய்கள் உள்ள உடல் நலம் குன்றிய சிறைவாசிகள், தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறைவாசிகள் மற்றும் மாற்றுத் திறனாளி சிறைவாசிகள் (விடுதலைக்காக அவர்களால் உருவாக்கப்பட்டதல்லாத) ஆகியோர்களின் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டும், இது குறித்தான மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இது தொடர்பாகத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் இவர்களின் நிகழ்வுகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரிய பரிந்துரை வழங்க ஏதுவாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் என். ஆதிநாதன் தலைமையின் கீழ் ஆறுபேர் அடங்கிய ஒரு குழு அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். ​ 

இக்குழுவில், மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், சிறைத் துறைத் தலைமை நன்னடத்தை அலுவலர், உளவியலாளர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்குரைஞர் என ஐந்து உறுப்பினர்களும், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் துணைத் தலைவர் பதவி நிலையில் உள்ள அலுவலர் ஒருவர் உறுப்பினர் செயலராகவும் அங்கம் வகிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.