சிலர் செய்த துரோகங்கள்... கண்ணீர் விட்டழுத சசிகலா! அறிக்கையிலிருந்து நீக்கப்பட்ட வரிகளின் பின்னணி

sasikala background statement
By Jon Mar 05, 2021 02:19 PM GMT
Report

சசிகலாவின் விலகலுக்கு ஆயிரமாயிரம் காரணங்கள் சொல்லப்படுகிறது, உடல்நிலை, பாஜக வின் அழுத்தம், குடும்ப பிரச்சனைகள் என பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்நிலையில் சசிகலாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் பிபிசி தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில், "கடந்த 2 நாட்களாக தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் தீவிர விவாதங்கள் நடந்து வந்தன. சொல்லப்போனால், சசிகலா கடுமையான மன உளைச்சலில் இருந்தார்.

ஆட்சியில் இருப்பவர்கள் கொடுக்கும் நெருக்கடிகளைவிடவும் உறவினர்கள் சிலர் கொடுத்த அழுத்தங்களால் கண்கலங்கி அழுதுவிட்டார். இதையடுத்து, இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனை வரவழைத்து அறிக்கையை தயாரிக்கச் சொன்னார். செவ்வாய் கிழமையே முழு அறிக்கையும் தயாராகிவிட்டது" என்றனர்.

"கர்நாடகாவில் இருந்து கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி சசிகலா வந்தார். அவர் வந்த பாதை நெடுகிலும் தொண்டர்கள் கொடுத்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். ஆனால், 'அ.தி.மு.கவை எதிர்த்து அ.ம.மு.க போட்டியிட வேண்டாம்' என்ற கருத்தில் உறுதியாக இருந்தார். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எம்.ஜி.ஆரையும் அம்மாவையும் நாம் எதிர்த்துவிடக் கூடாது எனவும் பேசிவந்தார்.

இதுதொடர்பாக குடும்ப உறுப்பினர் ஒருவர் அழுத்தம் கொடுத்தபோது, `இரட்டை இலையை நாம் ஏன் தோற்கடிக்க வேண்டும். நான் இந்த ஒரு தேர்தலை மட்டும் பார்க்கவில்லை.

அ.தி.மு.கவின் எதிர்காலத்தைப் பார்க்கிறேன்' எனக் கண்டிப்பான குரலில் கூறிவிட்டார். தவிர, இணைப்பு சாத்தியமாகும் எனவும் நம்பினார். அதையொட்டியே கட்சித் தலைவர்களை சந்தித்து வந்தார்.தவிர, பா.ஜ.க தலைமை கொடுத்த அழுத்தத்தால்தான் எடப்பாடி பழனிசாமி தன்னை எதிர்ப்பதாக அவர் நினைத்தார்.

ஆனால், சசிகலாவை சேர்த்துக் கொள்வது குறித்து பா.ஜ.க தலைமை நிர்வாகிகள் கூறியபோது, `இது எங்கள் கட்சி. அவரை ஏன் சேர்க்க வேண்டும்?' என முதல்வர் தரப்பில் கூறியுள்ளனர். அந்தத் தகவலைக் கேள்விப்பட்ட சசிகலா, அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். இதன்பிறகு அ.ம.மு.க போட்டியிடுவது குறித்துப் பேசப்பட்டபோது, `இந்த ஒரு தேர்தலில் நாம் விலகியிருக்கலாம்.

ஏனென்றால், தி.மு.கவை வெற்றி பெற வைத்த அவப்பெயர் நமக்கு வந்து சேர்ந்துவிடும்' என சசிகலா தெரிவித்தார். இதனை ஏற்க விரும்பாத குடும்ப உறுப்பினர், ` அப்படியானால் நீங்கள் ஒதுங்கியிருங்கள். அ.ம.மு.க போட்டியிடும்' எனக் கூறியுள்ளார். இதனை எதிர்பார்த்த சசிகலா, `எனக்கென்று ஒரு கட்சியில்லை. நான் அரசியலில் இருந்தே ஒதுங்குகிறேன்' என உறுதியாகக் கூறிவிட்டார்" என்றனர்.

முன்னதாக சசிகலா தயாரித்த அறிக்கையில், `அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன்' என்ற வார்த்தை இல்லை. சிலரது நெருக்கடி காரணமாகத்தான் அந்த வரிகளைச் சேர்த்தார். மேலும், அந்த அறிக்கையில், `சிலர் செய்த துரோகங்கள் எனக்கு பெரும் வலியைக் கொடுத்துள்ளன. அதற்குப் பழிவாங்கும் நேரம் இது இல்லை.

எங்கள் குடும்பப் பிரச்னையை எப்போது வேண்டுமானாலும் பேசித் தீர்த்துக் கொள்வோம்' என்ற வார்த்தைகளும் இடம் பெற்றிருந்தன. இந்த வரிகளை அவர் நீக்கச் சொல்லிவிட்டார். அந்த அறிக்கையின் எந்த இடத்திலும் அ.தி.மு.கவுக்கு எதிரான வாசகங்கள் இருந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தார்.

இதன்பிறகு அவர் கலங்கியதைக் கண்ட உறவினர் ஒருவர், ` நான்கு வருட சிறை வாழ்க்கையில்கூட இவ்வளவு துயரத்தில் அவர் இருந்ததில்லை' என வேதனைப்பட்டார். இப்படியொரு முடிவை எடுக்கப் போவது குறித்து வழக்கறிஞர்களிடமும் சசிகலா ஆலோசிக்கவில்லை. ஏனென்றால் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு உரிமை கொண்டாடி அவர் தொடர்ந்துள்ள வழக்கு வரும் 15 ஆம் தேதி வரவுள்ளது.

அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவாரா என்பதும் சந்தேகம்தான்" என விவரித்து முடித்தனர்.

- பிபிசி தமிழ்