ஆன்லைன் ரம்மியால் காவலர் தற்கொலை முயற்சி - தமிழக மக்கள் அதிர்ச்சி
ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம் என்று போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாடி பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்த நிலையில் சிலர் விரக்தியில் உயிர்களை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த ஆண்டு இறுதியில் அப்போதைய அதிமுக அரசு சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்தது.
ஆனால் கடந்த ஆகஸ்டு மாதம் 3ஆம் தேதி தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதில் காவலர் ஒருவரே விளையாடி பணத்தை இழந்து தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் வேலுச்சாமி என்ற ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரூ.7 லட்சம் அளவுக்குக் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததால் வேலுச்சாமி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம் என்று போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் சில தினங்களுக்கு முன் காவலர் ஒருவர், தன் ஓய்வு நேரம் முழுவதையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் செலவழித்து அதிக அளவில் பணத்தை இழந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிகழ்வு மிகவும் வருத்தமளிக்கும் நிகழ்வு. இவ்வித தவறான சூதாட்ட நிகழ்வில் ஈடுபடும் காவலர்களின் இந்த செயலால் அவர்களது மனைவி, குழந்தைகள் மற்றும் தாய், தந்தையர் பாதிக்கப்படுவதுடன் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய காவல் துறையினர் இவ்வித தவறான செயல்களில் ஈடுபடுவதால் காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்பதை உணர்ந்து சூதாட்டம் போன்ற தவறான செயல்களில் காவலர்கள் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளார்.