எங்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் - இந்திய அரசுக்கு கனடா பிரதமர் அழைப்பு!
எங்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என இந்தியாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா-கனடா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா - கனடா இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த கொலைக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம் சாட்டியது. மேலும், இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது.
இதற்காக இந்தியா, கனடாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் பதிலடியாக கனடா தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. அதேபோல், அந்நாட்டிற்கு செல்லும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியா எச்சரித்தது. இதனையடுத்து கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக இந்தியா - கனடா இடையேயான உருவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனடாவுடன் இந்தியா இனைந்து பணியாற்ற வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ
இதுதொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது "இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர் மோடியிடம் வெளிப்படையாக உரையாடினேன். அப்போது என் கவலைகளைப் பகிர்ந்துகொண்டேன்.
இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், முழு வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்திய அரசை கேட்டுக்கொண்டேன். இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு. உலகெங்கிலும் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு. நாங்கள் பிரச்சினைகளை உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை.
இந்த விஷயத்தின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ள எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.