செல்லப்பிராணிகளை இழந்த ஊழியர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் விடுமுறை - அதிரடி அறிவிப்பு!
கொலம்பியா நாட்டில் உள்ள அரசு ஊழியர்களின் செல்லப்பிராணிகள் இறக்க நேரிட்டால், அதற்கு இறுதி சடங்கு செய்வதற்காக அந்த ஊழியர்களுக்கு சுமார் 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துளளது.
பொதுவாக செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அதனை குடும்பத்தில் ஒருவராக தான் நடத்துவது உண்டு. அதாவது செல்லப்பிராணிகளுக்கென தனி இடம் கொடுத்து, சரியான நேரங்களுக்கு உணவு கொடுத்து, மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லுவது போன்ற அனைத்து வகையான பராமரிப்புகளையும் பார்த்து பார்த்து செய்வது வழக்கம்.
அந்த வகையில் அலுவலக ஊழியர்களின் செல்லப்பிராணிகள் ஒருவேளை இறக்க நேரிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக ஊழியர்களுக்கு 2 நாள் வரை விடுமுறை அளிக்க கொலம்பியா அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பாக வெளிவந்துள்ள தகவல்களின்படி, ஒரு வீட்டின் செல்லப்பிராணி இறந்தால், அதன் ஊழியர்களுக்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் பெற அனுமதிக்க வேண்டும் என்றதொரு புதிய சட்டத்தை கொலம்பிய அரசியல்வாதி ஒருவர் அரசுக்கு முன்வைத்துள்ளார்.
அதாவது கொலம்பியாவின் லிபரல் கட்சியை சேர்ந்த அலெஜான்ட்ரோ கார்லோஸ் சாகான் என்பவர் விடுப்பு தொடர்புடைய மசோதாவை நாடாளுமன்றத்தில் கோரிக்கையாக வைத்துள்ளார்.
நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் செல்லப்பிராணிகள் ஒரு முக்கிய பாகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட கொலம்பியா அரசு, ஊழியர்களது செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் விலங்குகளின் நலனை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை இல்லாத சிலர், செல்லப்பிராணிகளை குழந்தைகளாக பாவித்து வருவதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.