தமிழக அரசை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி - நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு கதறல்
பாஜக போராட்டத்தின் போது தமிழ்நாடு அரசுக்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.
தமிழக அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேச்சு
கிருஷ்ணகிரியில் இரு தரப்பு மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவின் மறைவுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் பாஜகவினர் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது முன்னாள் ராணுவ கர்னல் பாண்டியன், தமிழக அரசை மிரட்டும் வகையில் வெடிக்குண்டு வைக்க தெரியும், துப்பாக்கியால் சுடத்தெரியும் எங்களை சீண்டினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து இவர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் முன்னாள் கர்னல் பாண்டியன் மீது இரு தரப்பு இடையில் மோதல் ஏற்படுத்துவது போல பேசுவது, பொது அமைதி சீர்குலையும் வண்ணம் பேசுவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்
இதையடுத்து கர்னல் பாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். மேலும் தான் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரியிருந்தார்.
இதனை ஏற்று அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.மேலும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.