காதல் விவகாரத்தால் கல்லூரிக்கு மூன்று நாள் விடுமுறை- அதிரடியாக அறிவித்த கல்லூரி நிர்வாகம்
குடியாத்தம் அரசு கல்லூரியில், காதல் தகராறில் மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் மூன்று நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காந்திநகரில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது.
இங்கு பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கும் மாணவி ஒருவரை, அதே கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்கள் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மூன்று மாணவர்களும், மாணவிக்கு ரோஜாப்பூ கொடுத்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டனர்.
சக மாணவர்கள் தடுத்த நிலையில், நேற்று காலை மீண்டும் மாணவர்கள் மூவரும் கல்லூரிக்கு வந்த போது, தகராறு ஏற்பட்டு உருட்டு கட்டையால் அடித்துக் கொண்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக வெளியாட்கள், 50 பேர் கல்லூரியில் நுழைந்ததால் மோதல் ஏற்பட்டது.
குடியாத்தம் போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். இதையடுத்து, ஐந்து மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் மோதல் வராமல் இருக்க நேற்று முதல், மூன்று நாட்களுக்கு கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.