மதுபோதையில் கல்லூரி மாணவர் செய்த காரியம் - கடைசியில் சாவில் முடிந்த பரிதாபம்
செம்பரம்பாக்கத்தில் மதுபோதையில் எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பிரவீன்குமார் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பி.டெக் பயோ மெடிக்கல் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் செம்பரம்பாக்கத்தில் உள்ள 18 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியுள்ள நிலையில் நேற்று இரவு பக்கத்து அறையில் தங்கி உள்ள நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற பிரவீன்குமார் உட்பட நண்பர்கள் அனைவரும் மது போதையில் இருந்துள்ளனர்.
அப்போது பிரவீன்குமார் தங்கியுள்ள அறையின் சாவி மற்றொரு நண்பரிடம் இருந்ததால் தனது அறைக்கு செல்வதற்காக எட்டாவது மாடியில் உள்ள பிறந்த நாள் கொண்டாடப்பட்ட அறையின் பின் வழியாக உள்ள பைப்பை பிடித்து கொண்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரவீன்குமார் நிலைதடுமாறி எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதைக்கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன பிரவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.