கல்லுாரி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல் - போலீஸ் தடியடி..!

Tamil Nadu Police
By Thahir May 23, 2022 05:08 PM GMT
Report

திருவெறும்பூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர்,திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் திருச்சியில் உள்ள பாய்லர் ஆலை பகுதியில் மணியம்மை நகரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கல்லுாரிக்கு சென்று வந்துள்ளார்.

கடந்த 17-ம் தேதி வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.அங்கு வந்த பாய்லர் ஆலை போலீசார் மருத்துவமனைக்கு சென்று,மாணவியிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.

அந்த மாணவி போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தன்னை ஒருவன் ஒரு மாதமாக பின்தொடர்ந்து வந்ததாகவும்,கடந்த 11-ம் தேதி கல்லுாரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது,தன்னை காதலிப்பதாக கூறியதாகவும்,தான் அவரை செருப்பால் அடித்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து கடந்த 12-ந் தேதி கல்லுாரி முடிந்து வீட்டிற்கு வந்த போது,தன்னை காதலிப்பதாக கூறிய நபர் உள்ளிட்ட மூவர் தன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று சந்தில் வைத்து விஷம் கலந்த குளிபானத்தை குடிக்க வைத்ததாக தெரிவித்தார்.

கடந்த 13-ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும்,பின்னர் வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு அதிகமானதால் கடந்த 17-ந் தேதி தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும் அந்த மாணவி வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அந்த மாணவி தனியார் மருத்துவமனையில் இருந்து திருச்சி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே இன்று காலை உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.ஆனால் அவர்கள் கலைந்து செல்வதற்கு மறுப்பு தெரிவிக்கவே போலீசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர்.

அப்போது அங்கு இருந்த வக்கீல் இளங்கே சூரியன் என்பவரும் தாக்கப்பட்டார்,இதில் பொதுமக்கள் லேசான காயம் அடைந்தனர். இச்சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.