மாற்று சமுதாய பெண்ணை காதலித்ததால் இளைஞர் கொலை? - திருத்தணி அருகே அதிர்ச்சி சம்பவம்
திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த சிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த தோனீஸ்வரன் என்ற இளைஞர் தனியார் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் படிப்பு படித்து வந்தார். இவர் ஆர்எஸ் மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமுதாய பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே இன்று காலை திருத்தணி அடுத்த பொன்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மாணவன் தோனீஸ்வரன் உடல் சடலமாக கிடப்பதாக கண்ட சிலர் திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்துசென்ற போலீசார் தோனீஸ்வரனின் உடலை மீட்டு அரக்கோணத்தில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவன் காதலித்ததாக கூறப்படும் இளம்பெண், அவரது அம்மா மற்றும் அண்ணன் ஆகிய 3 பேரிடம் திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.