சொத்து தகராறு - பெரியம்மாவை கொடூரமாக கொலை செய்த மகன்!!
சிவகங்கை அருகே சொத்து தகராறில் பெரியம்மாவை வெட்டி கொடூரமாக கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்த தச்சவயல் பகுதியை சேர்ந்த செல்வராஜ் விவசாயிகாக இருந்து வருகிறார். இவருக்கும், இவரது சகோதரர் சேகருக்கும் இடையே பல நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக இரு குடும்பத்தினர் இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் செல்வராஜின் மனைவி மீனாட்சி நேற்று காலை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது சேகரின் மகனான கல்லூரி மாணவர் பாலா, பெரியம்மாவான மீனாட்சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த பாலா, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பெரியம்மா என்றும் பாராமல் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மீனாட்சி ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு கல்லூரி மாணவர் பாலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.