கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்து உயிருடன் சாக்கில் கட்டி வீசிய கொடூரம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில், 19 வயதான கல்லூரி மாணவியை கும்பலாக பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் சாக்கில் கட்டி ரயில் தண்டவாளத்தில் வீசிச்சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் வசித்துவரும் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவரை, அவரது முன்னாள் காதலன், நந்திகிராமில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த மாணவியை முன்னாள் காதலனும் ,அவரது நண்பர்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு அந்த மாணவியை கத்தியால் குத்தி, ஒரு சாக்கில் கட்டி அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் வீசிச் சென்றுள்ளனர்.
அப்போது அந்த வழியாக சென்ற பொது மக்கள் சிலர், மாணவியை மீட்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்,காயமடைந்த மாணவியை சிகிச்சைக்காக நாக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி அளித்த வாக்குமூலத்தை ஆதாரமாக கொண்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில், சிவ்ராஜ் சிங் தலைமையிலான அரசு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க ,மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் 15 நாள் பிரச்சாரத்தை நடத்தி வரும் நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவரை 7 பேர் கொண்ட மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யதனர் எனப்து குறிப்பிடத்தக்கது.