மனித கழிவுகளை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் கலெக்டர் சஸ்பெண்ட் - நீதிமன்றம் அதிரடி
மனித கழிவுகளை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் மாவட்ட ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
பொதுநல வழக்கு தாக்கல்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்திருந்தார்.
அவர் தொடுத்த வழக்கில் மனித கழிவுகளை மனிதர்களை கொண்டு அள்ளுவது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மனித கழிவுகளை மனிதர்களை கொண்டு அள்ளுவதை வன்மையாக கண்டித்து தடை விதிக்க வேண்டும் எனவும் மனித கழிவுகளை அள்ள நவீன முறையில் ரோப்போக்களை பயன்படுத்த வேண்டும் என தன்னுடைய வழக்கில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மகாதேவன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனித கழிவுகளை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கையில் அள்ளும் புகைப்படங்களை ஆதாரங்களாக மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டது.
நீதிபதிகள் கண்டனம்
இதை பார்த்து கடும் கோபம் அடைந்த நீதிபதி மகாதேவன்,இந்த புகைப்படம் எப்போது எங்கே எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
இந்த ஆதார புகைப்படங்கள் சென்னையில் எடுக்கப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் இந்த வழக்கில் தலைமைச் செயலாளரை அழைத்து மாவட்ட ஆட்சியரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட முடியும். ஆனால் நீங்கள் சமர்பித்த ஆதாரங்கள் உண்மையா என்பதை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.
எனவே மனுதாரர் இது குறித்து முழுவிவரங்களையும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி தெரிவித்தார். ஒரு போதும் மனித கழிவுகளை மனிதர்களை வைத்து அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது.
இந்த நிலை தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட ஆட்சியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர் மேலும் இது குறித்து விரிவான விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.