அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு: நேரில் ஆஜராக காவல்துறை சம்மன்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் வழங்கியுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக விளக்கம் பெற்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அருள் விக்னேஷ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
விசாரணையை கண்காணிக்க ஐ.ஜி.க்கு உத்தரவு
இந்த வழக்கின் விசாரணையை ஐ.ஜி. காமினி கண்காணிக்கவும், விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வழக்கின் முன்னேற்றம் குறித்து வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவும், இறுதி விசாரணை அறிக்கையை டிசம்பர் 22ஆம் தேதி சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, அருள் விக்னேஷிடம் காவல்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 75, 78, 79 உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, வருவாய் கோட்டாட்சியர் முருகன், வட்டாட்சியர் சேகர் ஆகியோரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் இல்லத்திற்குச் சென்ற அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, அவரிடம் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்.