அரசு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றி அசத்திய திருச்சி மாவட்ட ஆட்சியர்
அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிலம்பம் சுற்றி அனைவரையும் கவர்ந்தார்.
சிலம்பம் சுற்றிய ஆட்சியர்
திருச்சிராப்பள்ளி எடமலைப்பட்டி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டனர். முன்னதாக விழா நடைபெறும் பகுதிக்கு வந்த ஆட்சியர் பிரதீப் குமார் அங்கு சிலம்பம் சுழற்றும் பயிற்றுவிப்பவரிடமும் பேசிக் கொண்டிருந்தார்.
அவருடன் பேசிக்கொண்டே கையில் சிலம்பத்தை வாங்கி சுழற்றி மகிழ்ந்தார். சிறிது நேரம் சிலம்ப கலை பற்றி தகவல்களை பேசிக்கொண்டே ஆட்சியர் லாவகமாக சிலம்பத்தை சுழற்றினார்.
பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு வந்தவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு புறப்பட்டு சென்றார்.
கடந்த மாதம் திருச்சியில் நடைபெற்ற புத்தக திருவிழாவின் இறுதி நாளன்று உற்சாக மிகுதியில் மேடையில் பேசிவிட்டு விசில் அடித்து அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.