திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 2 நாட்கள் பக்தர்கள் வருவதை தவிர்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கன மழை
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவில்
கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் வெள்ள நீர் வந்து கொண்டிருப்பதோடு, மருதூர் அணைக்கட்டிலிருந்து 61,000 கன அடி நீரும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து 54,000 கன அடி நீரும் உப்பாற்று ஓடையில் 11,000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவிலான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், ஐயப்ப பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு இன்றும் (14.12.2024) நாளையும் (15.12.2024) வெளியூரிலிருந்து பொதுமக்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார்.