கல்விக் கட்டணம் செலுத்த காசு இல்லாததால்... கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு - நிலைகுலைந்த பெற்றோர்
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே கழுவன்திட்டை ஆர்.சி தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது இரண்டாவது மகள் பிரின்சி (19).
இவர் சைபர் ஸ்பாட் என்ற தனியார் டிப்ளமோ கல்லூரியில் OPTOMETRY 2ம் ஆண்டு படித்து வந்தார். இப்படிப்பிற்காக 30 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணம் செலுத்த நேற்று தான் கடைசி நாள்.
இதனால், தாய், தந்தையிடம் பல நாட்களாக கல்விக் கட்டணத்தை கேட்டு வந்துள்ளார். வறுமை காரணமாகவும் மூத்த மகளை கடன் வாங்கி திருமணம் செய்து கொடுத்த நிலையில், இந்த கல்வி கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த நிலையில் காணபட்ட மாணவி நேற்று வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில், வறுமையின் காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.