உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக இளைஞர் இந்தியாவுக்குத் திரும்ப தயார்
உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் சாய் நிகேஷ், நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகேயுள்ள சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ஜான்சி லட்சுமி தம்பதியர். இவர்களுக்கு சாய் நிகேஷ் (21), சாய் ரோகித் ஆகிய மகன்கள் உள்ளனர்
இதில் சாய் நிகேஷ், கடந்த 2018-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில், ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். இறுதியாண்டில் படித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் சாய்நிகேஷ் இதனை தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனின் துணை ராணுவ படையில் இவர் சேர்ந்துள்ளார்

இந்நிலையில் சாய்நிகேஷின் தந்தை 3 நாட்களுக்கு முன்பு அவருடன் பேசியுள்ளார். அப்போது பேசிய சாய்நிகேஷ், கோயம்புத்தூரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது குடும்ப ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது.
சாய் நிகேஷ் குறித்த இத்தகவல் உளவுத் துறை அதிகாரிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சாய் நிகேஷின் தந்தை ரவிச்சந்திரனிடம் கேட்டபோது,‘‘ மகனை மீட்டுத் தர அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மகன் நல்லபடியாக வர வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள். மற்ற விஷயங்கள் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை’’ எனக் கூறியுள்ளனர்.