கொரோனா பாதிப்பில் சென்னையை மிஞ்சும் கோவை - அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் அரசுக்கு கடிதம்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதே சமயம் கோயம்பத்தூரில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று முதல் முறையாக சென்னையை விட கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளது. தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கோயம்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் 10 பேரும் கூட்டாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், “சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிகமான ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக திருமண மண்டபங்கள், கல்லூரிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோவையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் அதிகரித்து வருவதால் அதற்கு சிகிச்சை அளிக்கவும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
கோவையில் தற்போது 10 தடுப்பூசி மையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுகின்றனர். தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” என அதில் கூறியுள்ளனர்.