"போலாம் ரைட்..! " அரசு பள்ளி மாணவர்களுடன் சுற்றுலா மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியருடனான கலந்துரையாடலின் ஒரு பகுதியாக பேருந்து மூலம் கோவையின் முக்கிய இடங்களுக்கு ஆட்சியருடன் மாணவ, மாணவிகள் போலாம் ரைட் என்ற தலைப்பில் சுற்றுலா மேற்கொண்டனர்.
அரசுப்பள்ளி மாணவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளுக்கு திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியருடன் காபி வித் கலெக்டர் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட 50 அரசுப்பள்ளி மாணவ மாணவிகள், இதில் கலந்து கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் கேள்விகளை எழுப்பினர்.
அப்போது மாணவி ஒருவர் ஆட்சியரிடம், நீதிபதி ஆகியிருந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு என்ன தண்டனை தருவீர்கள் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஆட்சியர், சட்டப்படி என்ன தண்டனை கொடுக்க முடியுமோ அதை நிச்சயம் கொடுப்பேன் என தெரிவித்தார்.
மேலும் போக்சோ குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் பள்ளியிலேயே குறைகள் கேட்க வேண்டும் எனவும் கூறிய அவர்,
போக்சோ குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து ஒரு வருடம் தடுப்பு காவலில் வைத்துள்ளதாகவும் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
குழந்தைகள் திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தகவலின் அடிப்படையில் மாணவியின் பெயரை சொல்லாமல், அவர்களிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும்
பெற்றோர்கள் அவர்களை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது அதிக பட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மாநில அரசு எதிர்ப்பதற்கு காரணம் நீட் தேர்வு எழுதி தேர்வு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு எனவும் அரசுபள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முன்னுரிமை இருப்பது போன்று போட்டித்தேர்வுகள் அமைய வேண்டும் எனவும்
அப்போதுதான் சேவை செய்ய நிறைய வாய்ப்புகள் இருக்கும் எனவும் தெரிவித்தார். சாதாரண மாணவர்கள் நன்றாக படித்து மருத்துவராக வரவேண்டும் எனவும்
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்ல விஷயங்களை செய்து கொண்டு வரவேண்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.
மருத்துவரான பின்பு ஐ.ஏ.எஸ் படித்து வென்றுள்ளதாக மாணவர்களிடம் கூறிய அவர், அதற்கு பிறகு தான் அதிகம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவதாகவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பேருந்து மூலமாக மாணவர்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்திற்கு அவர் பயணித்தார். அப்போது மாணவர்கள் போலாம் ரைட் என்ற உற்சாக குரல் எழுப்பினர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி வாரந்தோறும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும், மாணவர்களிடையே இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும்,
கோவையின் முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க இருப்பதாகவும் ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.