கோவை மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளியின் முதல்வர் மீது பதிந்த போக்சோ வழக்கு

By Anupriyamkumaresan Nov 13, 2021 11:05 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

மாணவி மீதான பாலியல் வழக்கு தொடர்பாக கோவை தனியார் பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பாக தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்றார். வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முயன்றுவந்த நிலையில், வியாழனன்று மாலையில் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

பயின்று வந்த பள்ளியில் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவரிடமிருந்து தப்பவே பள்ளியில் இருந்து விலகியதாகவும், இருப்பினும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் தற்கொலைக்கு தூண்டுதல், பாலியல் தொல்லை அளித்தல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை காவல்துறையினர் கைது செய்து, உடல் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அதன் பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கு மத்தியில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது சின்மயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போசோசட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.