கோவை மாணவியின் பெயர்,போட்டோவை வெளியிட்ட 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்குப் பதிவு

Sucide Youtube Student Channels Case File
By Thahir Nov 16, 2021 05:26 PM GMT
Report

கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி, அங்கு தொடர்ந்து படிக்க விரும்பாமல் மாநகராட்சிப் பள்ளியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் அந்த மாணவி, கடந்த 11ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட 3 பெயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து மாணவியின் செல்போன் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்ததில், அவருக்கு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்தது கண்டறியப்பட்டது.

மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, உடுமலைப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, ஆசிரியரின் பாலியல் தொல்லை பற்றி மாணவி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்தது.

இதையடுத்து சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனின் பெயரை வழக்கில் சேர்த்த காவல் துறையினர் அவரைத் தேடினர். அவர் தலைமறைவானதோடு செல்போனும் அணைக்கப்பட்டிருந்தது.

பின்னர் செல்போன் ஆன் செய்யப்பட்டபோது, மீரா ஜாக்சன் பெங்களூருவில் பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்த தனிப்படையினர், அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து நன்கு அறிந்த பிறகும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காததால், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

கோவைக்கு கொண்டுவரப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் காவல்துறையினர் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பின்னர் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, மீரா ஜாக்சன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பள்ளியின் முதல்வர் கைது செய்யப் பட்டதால், மாணவியின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.