கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை!
கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்ய முயற்சி செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் ஷாஜகான் (37). இவர் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கழிவறையில் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்திருக்கிறார்கள். உடனே ஷாஜகானிடமிருந்து சிறுமியை மீட்டுள்ளனர். பொதுமக்கள் ஷாஜகானுக்கு தர்ம அடி கொடுத்ததோடு, இது குறித்து காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

கடந்தாண்டு கோவை மத்திய அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து ஷாகஜானை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனையடுத்து, இந்த விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி தீர்ப்பில், ஷாஜகானுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்தனர். மேலும், 50 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.