கோவையில் மக்களோடு மக்களாக வலம் வரும் கமல்ஹாசன்
கோவையில் வலம் வரும் கமலஹாசன், பொதுமக்களுடன் பொதுமக்களாக கலந்து பேசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மாநகரின் முக்கிய பகுதியாக உள்ள, கோவை தெற்கு தொகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம், ஆணையாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, போன்ற பல்வேறு அரசு சார்ந்த முக்கிய அலுவலகங்கள், துறை சார்ந்த அலுவலகங்கள், நீதிமன்றம், போன்ற அனைத்து முக்கிய அலுவலகங்களும் செயல்படும் தொகுதியாக உள்ளது.
இந்த தொகுதியில், அதிமுக கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சயின் தேசிய மாநில மகளிர் அணித் தலைவி வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகின்றார், அவரை எதிர்த்து மக்கள் நீதி மையம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இன்று காலையில் பந்தய சாலை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை, பார்வையிட்ட கமலஹாசன் வாக்கிங் சென்று அந்த பகுதியில் உள்ள ஆவின் டீக்கடையில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அத்துடன் கோவை காந்திபுரம் பகுதியில் அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன் பயணிகளிடம் வாக்கு சேகரித்தார், இதனை தொடர்ந்து ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன் ஆட்டோ ஓட்டுனரிடம் கொரோனா பேரிடர் காலத்திற்குப் பின்னர் ஆட்டோ தொழில் எந்த அளவு பாதிக்கப்படுள்ளது, தற்போது டீசல் பெட்ரோல் விலை உயர்வு உங்களை எந்த அளவு பாதித்துள்ளது, ஆளுகின்ற அதிமுக அரசுக்கும், மத்திய அரசின் பாரதிய ஜனதா அரசும் சிறு குறு தொழில்களை எந்தளவுக்கு பாதிக்க செய்துள்ளது, குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் எப்படி உள்ளது ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்னென்ன நலத்திட்டங்கள் கொண்டுவரலாம் என ஆட்டோ ஓட்டுனரிடம் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.

ஆட்டோவில் கமல்ஹாசனை கண்ட பொதுமக்கள் அனைவரும் கைகளை ஆட்டி உற்சாகப்படுத்தினர், அனைவரையும் பார்த்து கைகளை ஆட்டியபடி மக்கள் நீதி மையத்திற்கு வாக்களியுங்கள் என வாக்குகள் சேகரித்தார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்திலும் ஆட்டோவிலும் கமலஹாசன் பயணம் மேற்கொண்டது கோவை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக பொதுமக்களுடன் மக்களாக நின்றபடி மக்களின் குறைகளை கேட்டதால் மக்கள் அனைவரும் மிகவும் எளிமையான மனிதர் கமல்ஹாசன் எனவும், அவரின் இந்த குணம் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும் கருதுகின்றனர். மேலும் மாற்றத்தை உருவாக்க மக்கள் நீதி மய்யத்தை ஆதரிப்பதாகவும் பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர்.