கோவையில் பழங்குடியின பெண்ணுக்கு இலவசமாக பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனை!
கோவையில், இக்கட்டான சூழலில் சிக்கி தவித்த நிறைமாத கர்ப்பிணி பழங்குடியின பெண்ணுக்கு, இலவசமாக பிரசவம் பார்த்து தனியார் மருத்துவமனை உதவியது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் அடர்ந்த மலைகளின் நடுவே பரளிக்காடு என்ற பகுதி அமைந்துள்ளது.
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இக்கிராம மக்கள், பிரசவம் போன்ற அவசர மருத்துவ உதவிக்கு சுமார் முப்பது கிலோ மீட்டர் தூரம் காட்டின் வழியே பயணித்து மலையடிவாரத்தை அடைய வேண்டியுள்ளது.
இந்நிலையில் இக்கிராமத்தை சேர்ந்த மீனா என்ற பழங்குடியின பெண் பிரசவத்திற்காக மலையடிவாரத்தில் உள்ள வெள்ளியங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கபட்டிருந்தார்.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மீனாவிற்கு குழந்தை பிறப்பதில் மருத்துவ ரீதியாக சிக்கல் ஏற்பட்டதோடு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால், வெள்ளியங்காடு கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதற்கான வசதிகள் இல்லாததால் கர்ப்பிணி மீனாவை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் மேட்டுப்பாளையம் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கிய நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற பொருளாதார வசதி இல்லாத மீனாவின் கணவர் பால்பாண்டி என்ன செய்வது என தெரியாமல் தவித்து நின்றார்.
இந்த இக்கட்டான சூழலை அறிந்த சுபா மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக மீனாவை தங்களது மருத்துவமனையில் அனுமதித்து முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து அவசர அறுவை சிகிச்சை மூலம் மீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. மேலும் தொடர் சிகிச்சை மூலம் தாயும் சேயும் பூரண நலமடைந்தனர்.
இதனையடுத்து தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான மருத்துகள் மற்றும் சத்து பொருட்கள் வழங்கப்பட்டு சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த பழங்குடியின பெண்ணிற்கு உடனடியாக உதவிய தனியார் மருத்துவமனையின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.