ஓட்டு போடுங்க..மாநாடு பட டிக்கெட் புடிங்க : இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நூதன முறையில் பேரம்

election coimbatore kovai youthcongress
By Irumporai Dec 04, 2021 02:16 AM GMT
Report

இளைஞர் காங்கிரஸ் பதவிகளை பெற அக்கட்சியினர்,இலவச சினிமா டிக்கெட் ஆசை காட்டி, நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் திரையரங்கில் மாநாடு திரைப்பட டிக்கெட் இலவசமாக வழங்கி இளைஞர்களையும், மாணவர்களையும் இளைஞர் காங்கிரஸில் தேர்தலில் வாக்களிக்க வைக்க பேரம் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

மாநிலம், மாவட்டம், தொகுதி வாரியாக இளைஞர் காங்கிரசில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, IYC என்ற பிரத்யேக செயலி மூலம் கடந்த நவம்பர் 7 ம் தேதி முதல் டிசம்பர் 7 ம் தேதி வரை தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் 19 வயது முதல் 35 வயது வரையுள்ள கட்சியின் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க இயலும்.

கடந்த ஒரு மாதமாக செயலி மூலம் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் , தேர்தல் நிறைவடைய சில தினங்கள் மட்டுமே இருக்கின்றன.

இந்நிலையில் கோவையில் உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நூதன முறையில் இளைஞர்களை கட்சியில் சேர்த்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் முகாமிட்டுள்ள அக்கட்சியினர் மாநாடு படம் பார்க்க வரும் இளைஞர்களிடம் இலவசமாக டிக்கெட் கொடுப்பதாகவும் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் மட்டும் கொண்டு வந்தால் போதும் என தெரிவிக்கின்றனர்.

அவற்றை கொண்டு வரும் இளைஞர்களை, காங்கிரஸ் கமிட்டியின் பிரத்யேக செயலி மூலம் ஆதார் கார்டு, ஒட்டுனர் உரிமம் போன்றவற்றை பயன்படுத்தி உறுப்பினராக்குகின்றனர.

உறுப்பினராவதற்கு கட்டணமாக 50 ரூபாயினை அவர்களே செலுத்தி கொள்ளும் காங்கிரஸ் கட்சியினர் , அந்த செல்போனுக்கு வரும் OTP எண் மூலம் தங்கள் அணியினருக்கு வாக்குகளை செலுத்தி கொள்கின்றனர்.

பின்னர் அடையாள அட்டை கொண்டு வந்த இளைஞர்களுக்கு "மாநாடு" திரைப்பட டிக்கெட்டை இலவசமாக கொடுத்து அனுப்புகின்றனர்.

இந்த காட்சிகளை அந்த திரையரங்கிற்கு சென்ற நபர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகின்றது.