கோவை மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
கோயம்புத்தூர் மாவட்டம்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர், தமிழ்நாட்டின் முக்கிய ஜவுளி, தொழில்துறை, வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் உற்பத்தி மையமாகவும் தொழில்மயமான மாவட்டங்களில் ஒன்றாகும். கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து இரண்டவது பெரிய நகராகும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதன் பிறகு நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் (வடக்கு), தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் (தெற்கு), சிங்காநல்லூர், கிணத்துககடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளும், கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி என இரு நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர்கள் குறித்து பார்க்கலாம்
பவன்குமார் ஐ.ஏ.எஸ்
கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிராந்திகுமார் பாடி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கோவையின் புதிய ஆட்சியராக பவன்குமார் கிரியப்பனவர் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 2016 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். பெங்களூரில் உள்ள பி.இ.எஸ் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) தனது பணியை தொடங்கினார்.
இதனைத்தொடர்ந்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய அரசு (2018) உதவிச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் துணை ஆட்சியர், திருப்பூர் மாவட்ட, தாராபுரம் துணை ஆட்சியர், கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவன கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), திருப்பூர் மாநகராட்சி ஆணையர், தலைமைச் செயலாளரின் இணை செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
கிராந்திகுமார் பாடி ஐ.ஏ.எஸ்
கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த சமீரன் ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கோவையின் புதிய ஆட்சியராக கிராந்திகுமார் பாடி ஐ.ஏ.எஸ் 30.01.2023 அன்று நியமிக்கப்பட்டார்.
தெலுங்கானாவை சேர்ந்த கிராந்திகுமார் பாடி 2015 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த சி.ஏ தேர்வில் அகில இந்திய அளவில் 35 வது இடத்தை பிடித்தார்.
மத்திய அரசின் அஞ்சல் துறையில் உதவி செயலராக பணியில் சேர்ந்த இவர், தொடர்ந்து நாமக்கல் உதவி ஆட்சியர், ஈரோடு வணிக வரி மற்றும் ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையர், பழனி முருகன் கோவில் செயல் அலுவலர், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று, மக்களின் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்தோடு, நீர் நிலைகளை மீட்டெடுக்கவும், நீர் வழித்தடங்களை சீரமைக்கவும் முயற்சிகள் எடுத்து மக்களிடையே பாராட்டு பெற்றார்.
ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ்
கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த எஸ்.நாகராஜன் ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ் 16.06.2021 அன்று கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.சமீரன் 2012 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ், டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சட்டப் பிரிவில் முதுகலைப் பட்டயப் படிப்பு படித்துள்ளார்.
முன்னதாக பரமக்குடி துணை ஆட்சியர், ராமநாதபுரம் மாவட்டம் கூடுதல் ஆட்சியர் (வருவாய்ப்பிரிவு), பாக் ஜலசந்தி திட்ட இயக்குநர், மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநர், மீன்வளத்துறை(TNFDC) மேலாண்மை இயக்குநர், தென்காசி மாவட்ட ஆட்சியர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
மீன்வளத்துறையில் பணியாற்றிய போது இஸ்ரோ, பி.எஸ்.என்.எல் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து பேரிடர் காலங்களில் உயிரிழப்புகளை தடுக்க நாட்டிலேயே முதல்முறையாக மீனவர்களுக்கு சாட்டிலைட் போன் வழங்கினார்.
மக்கள் குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் குறைகளை தீர்க்க பெரிதும் ஆர்வம் காட்டியவர், தூய்மை பணியாளரை பாதாள சாக்கடையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழுத்து வரை இறங்கி தனது இரு கைகளால் கழிவுகளை அள்ள வைத்ததற்காக, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
எஸ்.நாகராஜன் ஐ.ஏ.எஸ்
கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ராசாமணி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கோவையின் புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் ஐ.ஏ.எஸ் 15.03.2021 அன்று மாநில தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர், 2005 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். அந்த தேர்வில் அகில இந்தியா முதலிடம் பிடித்தார். ராஜஸ்தான் மாநிலம் BITS கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்துள்ள இவர், ஈரோடு மாவட்ட உதவி ஆட்சியராக (பயிற்சி) தனது பணியை துவங்கினார்.
அதை தொடர்ந்து, ஓசூர் துணை ஆட்சியர், சிவகங்கை கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி), ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர், வேலூர் மாவட்ட ஆட்சியர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், நில நிர்வாகம் கூடுதல் ஆணையர், தேனி மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் E-Governance CEO, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கூடுதல் செயலாளர், TNHSC திட்ட இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர், தொழில்முனைவோர் மேம்பட்டு துறை இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
முன்னதாக 2019 ம் ஆண்டு மதுரை மக்களவை தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வட்டாச்சியர் நுழைந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உயர்நீதிமன்றத்தால் மதுரை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கையை எந்த சர்ச்சைக்கும் இடமில்லாமல் நடத்தி முடித்தார். மேலும், பல ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருந்த அங்கன்வாடி காலிபணியிடங்களை, சிபாரிசு கடிதங்களை தூக்கி எறிந்து, மெரிட் முறையில் ஒரே இரவில் நியமித்து மறுநாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய போது, வனத்துக்கு நடுவே அமைந்து இருக்கும் சுமார் 50.79 ஹெக்டேர் தனியார் நிலங்களை தனியார் வனமாக்க உத்தரவிட்டு யானையின் வலசை பாதைகளை மீட்டெடுத்தார்.