கோவை கார் வெடிவிபத்து : சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 23) அதிகாலை 4.15 மணிக்கு கார் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது.
கார் குண்டு வெடிப்பு
காரில் இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தார். அப்பகுதியில் இருந்த மக்கள் இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்
கார் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து நடந்த பகுதியில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், மாநகர காவல் ஆணையர் வெ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரித்தனர்.
மீண்டும் ஒருவர் கைது
கார் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபர் யார், விபத்து ஏற்பட்டது எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்ட சதியா என விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.