கோவை குண்டு வெடிப்பு ... கோவில்களை தகர்க்க ஒத்திகை : வெளியான பகீர் தகவல்

Tamil nadu Coimbatore
By Irumporai Oct 29, 2022 06:22 AM GMT
Report

கோவையில் கடந்த 23-ந் தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கோவை குண்டு வெடிப்பு 

இதுதொடர்பாக கோவை மாநகர போலீசார் நடத்திய விசாரணையில், தீபாவளியையொட்டி மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, முபினின் கூட்டாளிகளான 6 பேரை கைது செய்தனர்.

அவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். ஒவ்வொரு நாள் விசாரணையிலும் பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தற்போது இறந்த முபினும், அவனது கூட்டாளிகளும் கோவையில் 3 கோவில்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், இதற்காக அவர்கள் ஒத்திகை மேற்கொண்ட அதிர்ச்சி தகவல்களும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஒற்றை ஓநாய் தாக்குதல்

மேலும் இந்த சம்பவத்தை அரங்கேற்றுவதற்காக அவர்கள், பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் கையாளும் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையை பின்பற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. பயங்கரவாத தாக்குதல் என்பது ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல் நடத்துவது ஆகும்.

ஆனால் இந்த ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது, பயங்கரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக சித்தாந்தத்திற்காக தாக்குதல் நடத்தும் முறை ஆகும். இந்த ஒற்றை ஓநாய் தாக்குதல்கள் ஐ.எஸ்., அல்கொய்தா ஆகிய அமைப்புகளின் சித்தாந்தத்தில் உருவானவை.

இது வெளிநாடுகளில் பலமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது. அந்த சித்தாந்தத்தின் கொள்கையிலேயே முபினும், அவனது கூட்டாளிகளும் கோவையில் சில இடங்களை குறி வைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் அதற்கு தேவையான வெடி பொருட்களை வாங்கி உள்ளனர். 

கோயில்களை தகர்க்க திட்டம்

அதன்படி ஜமேஷா முபீன் மற்றும் அவரது உறவினர்களான அசாருதீன், அப்சர் கான் ஆகியோர் காந்தி பார்க்கில் 2 கியாஸ் சிலிண்டர்களும், உக்கடம் லாரி பேட்டை பகுதியில் 3 இரும்பு டிரம்களும் வாங்கி உள்ளனர். இதற்கான ரசீதுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை உறவினரான அப்சர் கான் ஆன்லைனில் வாங்கி கொடுத்துள்ளார்.

கோவை குண்டு வெடிப்பு ... கோவில்களை தகர்க்க ஒத்திகை : வெளியான பகீர் தகவல் | Coimbatore Car Blast Video Evidence

பொருட்கள் அனைத்தும் வாங்கி தயார் செய்து விட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். முபினின் வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோனியம்மன் கோவில், கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள புலியகுளம் விநாயகர் கோவில் பகுதிகளை தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கான இடங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக ஒத்திகை பார்க்க 3 பேரும் முடிவு செய்தனர். அதன்படி முபின் மற்றும் அசாருதீன், அப்சர்கான் ஆகியோர் கோனியம்மன் கோவில், கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில், புலியகுளம் விநாயகர் கோவில் பகுதிக்கு பல முறை சென்று வந்துள்ளனர்.

 போலீசார் விசாரணை 

 அப்போது அந்த பகுதியில் எவ்வாறு திட்டத்தை செயல்படுத்தலாம். எந்த இடத்தில், எந்த நேரத்தில் அரங்கேற்றலாம் என ஒத்திகையிலும் ஈடுபட்டுள்ளனர். முதலில் கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முடிவு செய்துள்ளனர். அதன்படி ஜமேஷா முபின் காரில் 2 கியாஸ் சிலிண்டர்கள், வெடி மருந்துகள், ஆணி, கோலிகுண்டு உள்ளிட்டவற்றை நிரப்பி கொண்டு கோட்டைமேடு பகுதிக்கு சென்று கோவில் முன்பு சென்றதும் கியாசை திறந்து விட்டு தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல்களை வழக்கை விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். கோவில்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக ஒத்திகையில் ஈடுபட்ட காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. அதில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

கோவை குண்டு வெடிப்பு ... கோவில்களை தகர்க்க ஒத்திகை : வெளியான பகீர் தகவல் | Coimbatore Car Blast Video Evidence

மேலும் சில காட்சிகளை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டு அதிகாரிகள் விசாரணையை தொடங்கி விட்டனர்.

இறந்த முபினின் வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்சிஜன் சிலிண்டனர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், புத்தகம், ஜிகாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கைதான 6 பேரும் 3 நாள் காவல் முடிந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.