கோவையை புறக்கணிக்கிறோமா?... இங்கு வந்து பார்த்து விட்டு பேசுங்கள் என மு.க.ஸ்டாலின் பதிலடி
கொரோனா தடுப்பு பணியில் கோவை புறக்கணிப்படுவதாக வெளியான தகவலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிபிஇ உடையணிந்து கொரோனா நோயாளிகளின் வார்டில் சென்று அப்போது அவர் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனை முன்கள பணியாளர்களை ஊக்கப்படுத்தவே கொரோனா நோயாளிகளை சந்தித்ததாக தெரிவித்தார். அப்போது கொரோனா தடுப்பு பணியில் கோயமுத்தூர் புறக்கணிப்படுவதாக செய்திகள் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், அப்படி பேசுபவர்கள் நேரடியாக வந்து நாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பை பார்த்த பின்பு பேச வேண்டும் என பதிலடி கொடுத்தார். மேலும் எந்த ஒரு ஊருக்கும் பாரபட்சம் காட்டாமல் கொரோனா தடுப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.