வனத்துறையினருக்கு போக்கு காட்டிவந்த சிறுத்தை பிடிபட்டது
கோவை குனியமுத்தூர் பகுதியில் 4 நாட்களாக போக்குக்காட்டி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிக்கியது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் கிடங்கு ஒன்றில் கடந்த 17ஆம் தேதி அன்று சிறுத்தை ஒன்று புகுந்து விட்டதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
வனத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், கிடங்கு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அத்துடன் சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைத்தனர்.
கூண்டினுள் இறைச்சி ,தண்ணீர் வைக்கப்பட்டது. இருப்பினும் நான்கு நாட்களாக கூண்டுக்குள் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு சிறுத்தை கூண்டில் பிடிபட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதங்களாக இப்பகுதியில் சுற்றித் திரிந்த இந்த சிறுத்தை தற்போது பிடி பட்டுள்ளதால் அப்பகுதி வாசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.