“விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்” : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு

investigation cooperate rajendrabalaji
By Irumporai Jan 16, 2022 05:04 AM GMT
Report

விருதுநகர்:விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதன்பின்னர்,பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார்.

இதனால்,8 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், சமீபத்தில் கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்து காவல்துறை கைது செய்தது.இதனையடுத்து,ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது,ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.இதனைத் தொடர்ந்து,பலத்த பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு ராஜேந்திர பாலாஜி அழைத்து செல்லப்பட்டார்.

இதற்கிடையில்,ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை,சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து,இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரி 12-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

அதன்பின்னர்,இது தொடர்பான வழக்கு ஜனவரி 12-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நிபந்தனைகளின்படி,ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும்,விருதுநகரை விட்டு ராஜேந்திர பாலாஜி வேறெங்கும் செல்லக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.மேலும்,காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்,விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் திருத்தங்கலில் தான் தங்கியிருப்பதாகவும்,உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவில் விதிக்கப்பட்ட நிபந்தனை படி,சம்மன் கொடுத்து அழைத்தால் எந்த நேரத்திலும் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.