கங்கை அமரன் மன்னிப்பு கேட்கணும்.. இல்லைன்னா ... மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை

Gangai Amaren Ilayaraaja BJP Narendra Modi
By Petchi Avudaiappan May 04, 2022 10:50 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பத்திரிகையாளரை மிரட்டும் வகையிலும் அநாகரீகமாகவும் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தனியார் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்த இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் பத்திரிகையாளர் சமீபத்தில் பெரும் சர்ச்சையான இளைராஜாவின் அம்பேத்கர் - மோடி ஒப்பீடு குறித்து கேள்வியெழுப்பினார். இதனைக் கண்டு கடுப்பான அவர் மிரட்டும் வகையில் சத்தம் போட்டு ஒருமையில் பேசும் வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதனிடையே இதுகுறித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசையமைப்பாளர் கங்கை அமரன் தனியார் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ளார். இந்த வீடியோ மே 2 ஆம் தேதி அந்த யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் பிரதமர் மோடியை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுடன் ஒப்பிட்டுள்ளது குறித்து நேர்காணலை நடத்திய பத்திரிகையாளர் ஷங்கர் சர்மா கங்கை அமரனிடம் கேள்வியாக முன்வைக்கிறார்.

"அந்த முன்னுரை உங்களால் எழுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு கருத்து பரவுகிறதே?" என்று கங்கை அமரனிடம் கேட்கிறார். இதனால் கோபமடைந்த கங்கை அமரன் ஷங்கர் ஷர்மாவை மிரட்டும் வகையில்  கையை நீட்டியபடி "வாயை மூடு" என்று ஒருமையில் பேசுகிறார். கங்கை அமரன் இவ்வளவு கீழ்த்தரமாக பேசிய பிறகும், சங்கர் ஷர்மா சிறிதும் கோபப்படாமல், இது தன்னுடைய கருத்து இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டு, இப்படி ஒரு கருத்து பரவுவதை அவருக்கு சுட்டிக்காட்டுகிறார். 

பத்திரிகையாளர் கேட்கும் கேள்விக்கு விரும்பினால் பதில் சொல்லலாம். இல்லையென்றால் பதில் சொல்ல விருப்பமில்லை என்று கூறிவிட்டு கடந்து செல்லலாம். அதைவிடுத்து, கேள்வி கேட்டவரை மிரட்டுவது அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். இப்படி அநாகரீகமாக பேசுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

எனவே கங்கை அமரன் உடனடியாக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.