எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்யும் விஜய்
அரசுப் பயணமாக டெல்லி சென்றிருந்த தமிழக முதலமைச்சர் விஜய், கொல்லூர் மூகாம்பிகை அம்மனை தரிசிப்பதற்காக மங்களூரு சென்றடைந்தார்.
மூன்று நாள் பயணமாக கடந்த வாரம் டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய், முதல் நாளில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்தார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மூகாம்பிகை கோவிலில் விஜய்
அப்போது தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் நலன் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். டெல்லி பயணத்தை நிறைவு செய்த பின்னர், முதலமைச்சர் விஜய் மங்களூரு புறப்பட்டார்.
தமிழ்நாடு இல்லத்திலிருந்து டெல்லி விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் மங்களூரு சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காரில் புறப்பட்டார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில், தென்னிந்தியாவின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்கிறவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதலமைச்சர்களின் வழியைப் பின்பற்றி விஜயும் மூகாம்பிகை அம்மனை தரிசிக்க உள்ளார்.
மேலும், அரசியல் எதிர்ப்புகள் மற்றும் மறைமுக சவால்களை சமாளிக்கும் நோக்கில் சிறப்பு சண்டி ஹோமம் நடத்தப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதுபோன்ற ஹோமம் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.