திமுக தோல்விக்கு காரணம் - திருச்சி கிழக்கில் விளாசிய முதல்வர் விஜய்
திமுக நடத்தும் குடும்ப அரசியல் தான் தோல்விக்கு காரணம் என ஒவ்வொரு திமுக தொண்டரும் கூறுகிறாா்கள் என திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
திருச்சி கிழக்கில் விஜய் பேச்சு
திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் திருச்சி சென்றுள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் விஜய், "திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றியும், வணக்கமும். திருச்சி எப்படி தமிழ்நாட்டிற்கு இதயம் மாதிரியோ, அதே மாதிரி திருச்சி கிழக்கு மக்களும் எனது இதயத்திற்கு நெருக்கமானவர்கள்.
நாம ஆட்சிக்கு வந்த சில வாரங்கள்தான் ஆகுது. 6 மாதம் அமைதியாக இருப்போம் என்றாா்கள். ஆனால் 6 நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. ஆட்சிக்கு வந்த அரை மணிநேரத்திலேயே ஆரம்பிச்சுட்டீங்க, பாவம் கல்யாண வீட்டுல கூட போய் பொலம்புறாங்க.
புரட்சி தலைவர் எம்ஜிஆரின் முதல் தேர்தலில் கூட இந்த அளவுக்கு வாக்கு வாங்கவில்லைனு சொல்ராங்க. அந்த அளவுக்கு ஆதரவு கொடுத்துருக்கீங்க. எம்ஜிஆரோடு என்னை நான் ஒப்பிடவில்லை. எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் தான். ஆனால், நாம பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் அன்பாக உழைக்க வந்த உங்க விஜய் அவ்வளவுதான்.
தேர்தலில் இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரிச்சு இருந்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும். வருங்கால தேர்தல்கள் எல்லாத்துலயும் உங்களோட முழு நம்பிக்கையை பெறுவேன் என நம்பிக்கை இருக்கு.
நம்மளை கேலி பேசுற கூட்டம் இருக்கு. அப்படி பேசுறத தயவுசெய்து நிப்பாட்டாதீங்க. பேசிக்கிட்டே இருங்க. நான் மக்களுக்கு தேவையான நல்லதை செஞ்சுக்கிட்டே இருப்பேன்.
திமுகவின் தோல்விக்கு காரணம்
திமுகவின் தோல்விக்கு காரணம் தேடுகிறாா் மு.க.ஸ்டாலின், உங்கள் குடும்பம் தான் காரணம் என தொண்டா்கள் கூறுவது கேட்கவில்லையா? திமுக நடத்தும் குடும்ப அரசியல் தான் தோல்விக்கு காரணம் என ஒவ்வொரு திமுக தொண்டரும் கூறுகிறாா்கள்.

புதுசாக நாம் சூட் எல்லாம் போட்டு வருகிறோம் இல்லையா, அதைப்பற்றிக் கூட நிறைய பேர் விமர்சிக்கிறார்கள். ஏன் நாமெல்லாம் கோட் சூட் போடக்கூடாதா? அதிகாரம் செய்கிறவர்களும், ஆதிக்கச் சக்திகளும் மட்டும்தான் கோட் சூட் எல்லாம் போட வேண்டுமா என்ன? அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது.
நான் என்ன கலர் கலராகவா கோட் சூட் போட்டு வருகிறேன்? இரண்டே இரண்டு கலர்தான். அது நம் எல்லோர் மனதையும் போல பிளாக் அண்ட் ஒயிட். எல்லாவற்றிலும் பிளாக் அண்ட் ஒயிட்டாக இந்த விஜய் இருப்பான் என்பதைக் காட்டுவதற்காகத்தான் அந்த உடை.
அந்தப் பிளாக்கில் இருக்கிற கருப்பு கூட யாரைக் குறிக்கும், எதைக் குறிக்கும் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
மக்களுக்கு என்கிட்ட என்ன சொல்றங்கனா, விஜய் நீ எங்களுக்காக உழைக்க வந்துருக்க. நீ எங்களுக்காக உழைக்க வந்துருக்கீங்க அந்த வேலையை நீங்க பாருங்க. உங்களை பத்தி பேசுறவங்களை நாங்க பார்த்துகிறோம் என சொல்லிட்டாங்க.
திமுகவும் மற்றும் பலரும் ஒண்ணா சேர்ந்து இந்த விஜய் ஆட்சி வந்துடக்கக்கூடாதுனு கடைசி 5 நாள் பண்ண கூத்து இருக்கே. இப்படி எல்லாம் கூட நடக்குமானு நினைச்சேன்.
திமுக ஸ்டைல்ல சொல்லனும்னா ரீல்ஸ் போட்ட கூட்டம் எல்லாம் இப்போ செய்தி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அது நல்லது தான். இப்படிபட்ட மக்களைதான் தற்குறி தற்குறினு சொல்றாங்க. தற்குரினு சொல்ற மக்கள்தான் உங்க அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிட்டாங்க.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திமுகவும் மற்றும் பலரும் தினமும் அறிக்கை வெளியிடுகிறார்கள். போதைப்பொருள் கலாச்சாரத்தால் வன்முறை அதிகாித்தால் அதற்கு எங்கள் மீது பழி போடுவதா? வீதிக்கு வீதி போதைப்பொருள் கலாச்சாரத்தை வளா்த்துவிட்ட திமுக இன்று எங்களை குறைகூறுவதா?
திமுக தீய சக்தி மட்டும் இல்லை. தூர சக்தி, கோர சக்தி, பார சக்தி. இப்போதும் சொல்லிக்கிறேன். இப்பவும் இங்க போட்டி ரெண்டே பேருக்கு நடுவுலதான் போட்டியே. ஒண்ணு திமுக இன்னொண்ணு தவெக.
மற்றவங்களுக்கு இங்க வேலையில்ல. அதை மீறி யாராவது இடையில வந்தா ரிசல்ட் என்னனு தெரியும். அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல ராஜா. பெண்கள் பாதுகாப்பு தொடர்பான 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்டம் அடுத்த வாரம் தொடங்கி வைக்கப்படும்" என பேசியுள்ளார்.