சர்ச்சையில் சிக்கிய 2 தவெக எம்.எல்.ஏ.க்கள் - கடைசியாக சந்தித்து எச்சரித்த முதல்வர் விஜய்
cm vijay strictly warns 2 mlas at tvk mlas meet: தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சர்ச்சையில் சிக்கிய 2 எம்.எல்.ஏ.க்களை முதல்வர் விஜய், கடைசியாக சந்தித்து கடுமையாக எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
தவெக எம்.எல்.ஏ.க்கள் சமீபகாலமாக, மாவட்ட ஆட்சியருக்கு தவறான வகையில் குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டு, குடிநீர் குறித்து புகார் அளித்த நபரை தாக்கியது என தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தனர்.
இதனையடுத்து, தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், தவெக எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தியதோடு, சர்ச்சையையில் சிக்கிய எம்.எல்.ஏ.க்களை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் பேசிய அவர், வெற்றிகரமாக 6 மாதத்தை நிறைவு செய்துள்ளோம், தொடர்ந்து மக்கள் சேவையில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும். நாம் கொண்டு வரும் மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்துங்கள்.
எதிர்க்கட்சிகள் அதிகமாக உள்ளதால் நமக்கு எதிரான கருத்துக்கள் அதிகமாக வருகிறது. நமக்கு எதிராக அதிகமான கருத்துக்கள் உள்ளது என யாரும் தொய்வடைய வேண்டாம்.
நமது ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களையும், செயல்பாடுகளையும் பொறுத்துக் கொள்ள முடியாமல், பல்வேறு தவறான, அவதூறு செய்திகளை பரப்பி, அரசு நிர்வாகத்தை முடக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
அவதூறு பரப்பும் செயல்களுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த விதத்திலும் இடம் தந்துவிடக்கூடாது. எந்த Trap-லும் மாட்டாமல் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
என்னை சந்திக்க விடாமல் உங்களை தடுக்கிறார்களா?
சட்ட ஒழுங்கு பிரச்னையில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி உள்ளேன். தொகுதியிலோ அல்லது கட்சி ரீதியாகவோ எந்த பிரச்சனை இருந்தாலும் உடனடியாக என்னை நேரில் சந்திக்கலாம்.
உங்கள் தொகுதியில் நீங்கள் செய்யக்கூடிய பணி தான் அடுத்த தேர்தலில் உங்களை வேட்பாளராக நிற்க வைக்கும். என்னை யாராவது பார்க்க விடாமல் உங்களை தடுக்கிறார்களா? அப்படி தடுத்தால் உடனே அது குறித்து என்னிடம் தெரிவியுங்கள்" என தெரிவித்துள்ளார்.
மக்கள் பணிகளை மேற்கொள்ள உள்ளூர் அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என எம்.எல்.ஏ.க்கள் சிலர் புகார் தெரிவித்த நிலையில் எம்எல்ஏக்கள் குறிப்பிடும் பணி மற்றும் அதிகாரிகளின் பெயர்களை முதலமைச்சர் விஜய் தனது டைரியில் குறிப்பெடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், புகார் அளித்தவரை தாக்கி, குடும்பத்தை அழித்து விடுவேன் என மிரட்டிய துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு தவறான வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றஞ்சாட்டபட்டுள்ள எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆகிய இருவரையும் கடைசியாக அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.